அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - திருவிழாக்கள்


திருவிழாக்கள் :

         சித்திரைக் கனி என்னும் தமிழ்வருடப் பிறப்பு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப் பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடி சஷ்டி, ஆவணி அவிட்டம், விநாயக சதுர்த்தி , நவராத்திரி, ஐப்பசி கந்தர் சஷ்டி, சூரசம்உறாரம், கார்த்திகை ஜோதி, மார்கழி மாதப்பூசை, திருவாதிரை, தைமாதம் திருத்தேர், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் கோயிலில் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. மற்றும் அமாவாசை, சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி நாள், வெள்ளிக் கிழமை போன்ற நாட்களில் அன்பர்கள் வந்து சுப்பிரமணியரைத் தரிசிப்பர். மற்ற நாட்களிலும் பொது மக்கள் வருவர். அண்மைக் காலத்தில் சிவன்மலையில் திருமண நிகழ்ச்சிகள் மிகுதியாக நடைபெறுகின்றன. ஆடி சஷ்டியில் அன்னதானம் சிறப்பாக நடைபெறும். கார்த்திகை மாதம் பௌர்ணமியில் வரும் கார்த்திகை அன்று வழிபடுவது மிகவும் விசேடம் என்று தலபுராணம் கூறுகிறது.


தைப்பூசத் தேர்திருவிழா :

தைப்பூசத் தேர் திருவிழா நிகழ்ச்சிகள் பின்வருமாறு நடைபெறுகின்றன. விழாவின் தொடக்கமாக முதல் நாள் இரவு 9 மணிக்கு கிராம தேவதை அருள்மிகு வீரகாளியம்மன் கோயிலில் கொடியேற்றம் நடைபெறும். இரண்டாம் நாள் இரவு 7 மணிக்கு அருள்மிகு வீரகாளியம்மன் திருவுலாக்காட்சி நடைபெறும். மூன்றாம் நாள் இரவு 9 மணிக்கு அருள்மிகு வீரகாளியம்மன் திருத்தேர்த் திருவிழாவும், கிராம சாந்தியும் நடைபெறும்.கோவில் சிறப்பு உத்தரவு பெட்டி :

சிவன்மலை கோயில் சிறப்புகளில், பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது. முன்னமே  ஆண்டவன் உத்தரவு மூலம் சுவாமி உணர்த்துகிறார். சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் பூ  கேட்கின்றனர். அனுமதி கிடைத்தால், ஏற்கெனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. கிணற்றில் தண்ணீர் இறைக்கும் சால்பரி வைத்து பூஜை செய்யப்பட்ட பொழுது, சால்பரிகள் பயன்பாடு குறைந்து, மின் மோட்டார்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. துப்பாக்கி வைத்து பூஜை செய்த போது, சீனா போர், சைக்கிள் வைத்து பூஜை செய்த போது, மொபட், பைக் என வாகனங்களின் பெருக்கம் அதிகரித்தது; தண்ணீர் வைத்து பூஜை செய்த போது, சுனாமி ஏற்பட்டது, மணல் வைத்து பூஜை செய்த போது, மணல் விலை ஏறியது, மண் வைத்து பூஜை செய்த போது ரியல் எஸ்டேட் தொழில் உருவாகி வளர்ந்தது. மஞ்சள், தங்கம், நெல் என பொருட்கள் வைத்து பூஜை செய்த போது, அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்தது என , ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் மீது ஏதாவது ஒரு நல்லது, கெட்டது நடந்து வருகிறது.